பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வது தீர்வாகாது.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.கே.முனீர்

 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வது தீர்வாகாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.கே.முனீர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தியது. மேலும் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களையும் என்.ஐ.ஏ. கைது செய்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 பிரிவு 35ன் கீழ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வது தீர்வாகாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.கே.முனீர் தெரிவித்தார்.

எம்.கே.முனீர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.கே.முனீர் கூறியதாவது: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வதே ஒரே தீர்வு என்று நாங்கள் நம்பவில்லை. அவர்களின் சித்தாந்தத்தை எதிர்த்து போராடி அவர்களை அம்பலப்படுத்த வேண்டும். தடை என்பது என்பது நிரந்தர தீர்வல்ல. அப்படியென்றால், ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டபோது, அது அவர்களை செயல்படவிடாமல் தடுக்கவில்லை. எனவே, இது போன்ற அமைப்புகளை சமூகப் புறக்கணிப்பதே ஒரே வழி. இந்த குழுக்கள் எங்கும் எந்த சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் பெறக்கூடாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளை சட்டப்பூர்வமாக்கக் கூடாது என்பதை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் பலமுறை கூறினோம். ஈராட்ப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன்  அரசியல் கூட்டணி வைத்து, அதன் பிறகு தலச்சேரியில் சி.பி.எம்.தான் அரசியல் கூட்டணி வைத்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலின்போது கொடியேரி பாலகிருஷ்ணன் மற்றும் சி.பி.எம். கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆதரவு இருந்தது. அதற்காக தேஜஸ் நாளிதழில் விளம்பரம் கூட கொடுத்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் இரகசிய புரிந்துணர்வு யாருக்கு உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.