குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்பு

 
jagdeep

துணை குடியரசுத் தலைவர்  தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜ கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்க உள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து  புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாடாளுமன்றத்தில் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில், பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கரும் (71), எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராஜஸ்தான் ஆளுநருமான மார்கரெட் ஆல்வாவும் (80) போட்டியிட்டனர்.  இதில், பாஜ கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும், மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதன் மூலம், 346 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.  

இந்நிலையில்  நாட்டின் 14வது துணை  குடியரசுத் தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்க உள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.  துணை குடியரசுத் தலைவரே மாநிலங்களவையை நடத்தும் அவைத் தலைவராகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.