தெலங்கானா அரசின் ஊழல் - சிபிஐ இயக்குநரிடம் ஜெகன் மோகன் ரெட்டி தங்கை பரபரப்பு புகார்

 
YSR sharmila

டெல்லி சென்றுள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவியுமான ஷர்மிளா, சிபிஐ இயக்குநரிடம், தெலங்கானா அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு அவரது மகன், ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கினார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்திய ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், கடந்த ஆண்டு தனது அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவரது தங்கை ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்  தெலங்கானா என்ற புதிய கட்சியை நிறுவியிருனார். கடந்த ஓராண்டு காலமாக தெலங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அவர் இன்று திடீரென டெல்லியில் சிபிஐ இயக்குனரை சந்தித்தார்.

அப்போது, தெலங்கானாவில் காலேஸ்வரம் பல் நோக்கு உயர் மட்ட நீர்பாசன திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாயில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.இது தொடர்பாக டிஜிபி அந்தஸ்து கொண்ட அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக தெலங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.