மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் இது - கேரள முதல்வர் பினராயி விஜயன்..

 
pinarayi


மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது  என கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா,  முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை  தெரிவித்திருந்தார்.   அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக டெல்லி பாஜக செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.  இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம்  கண்டித்து கான்பூரில்  மோதல் வெடித்தது.  பிரச்சனை அரபு நாடுகளிலும் எதிரொலித்ததால்,  நுபுர் சர்மாவை  கட்சியில் இருந்து தற்காலிகமாக  நீக்கி பாஜக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதேபோல்,  நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.  

Nupur sharma -

நபிகள் நாயகம் குறித்தான அவதூறு கருத்துக்கு  பாகிஸ்தான், சவுதி அரேபியா, குவைத், பக்ரைன் உள்ளிட்ட 15 இஸ்லாமிய  நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றன. இந்தியா மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும்   இந்திய தூதரகங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளன. இந்த விவகாரம் உள்நாட்டிலும் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பாஜக வெறுப்பு அரசியலை விதைப்பதக குற்றம் சாட்டியுள்ளன.  அந்தவகையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.  

மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் இது - கேரள முதல்வர் பினராயி விஜயன்..

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "சங்க பரிவாரம் மீண்டும் நம் நாட்டினை அவமதித்துள்ளது. உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் நமது மதச்சார்பற்ற ஜனநாயகம், பாஜக செய்தித் தொடர்பாளரின் அவமதிப்புப் பேச்சால் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பும் நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.


அதேபோல் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர்,  இந்த பேச்சு சமூக பாதுகாப்புக்கு மட்டுமின்றி , இந்திய பொருளாதாரத்திற்கே உலை வைத்துள்ளதாக கூறினார்.  பல இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய ஜிசிசி நாடுகளில்  லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர், 2020 - 21 காலக்கட்டத்தில் மட்டும் 90 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போது இந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் கூறினார்.