லக்கிம்பூர் விவகாரம் : மத்திய இணை அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்..

 
லக்கிம்பூர் விவகாரம் : மத்திய இணை அமைச்சர்  மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்..

லக்கிம்பூர் விவகாரத்தில்  மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும்  ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடைய வேண்டும்  என்றும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி  விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மீஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 4 விவசாயிகள் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தனர்.  இதனால் ஏற்பட்ட வன்முறையில்  பத்திரிகையாளர் ஒருவர் உட்பட  மேலும்  4 பேர் கொலை செய்யப்பட்டனர்.  8 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

லக்கிம்பூர் வன்முறை சம்பவம்

இச்சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பதாக  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  கைது செய்தனர்.  உச்சநீதிமன்றத்தின் தொடர்ச்சியான தலையீட்டுக்கு பிறகே ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.   இந்த வழக்கு விசாரணை தொடர்பாக உத்தரப் பிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து லக்கிம்பூர் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனையடுத்து  ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து  நிராகரிக்கப்பட்டன.   இறுதியாக   அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆசிஷ்  மிஸ்ராவுக்கு கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதியன்று ஜாமீன் வழங்கியது.

ஆஷிஷ் மிஸ்ரா

பின்னர்  இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   இந்நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை உச்சநீதிமன்றம் ரத்து செய்து அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.  மேலும் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.