பாஜக தேர்தலை சந்திக்க தயாரா ? - உத்தவ் தாக்கரே சவால்

 
uddhav thackeray

மகாராஷ்டிராவில் தேர்தலை சந்திக்க பாஜக தயாரா என சவால் விடுத்துள்ள முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா கட்சியை அழிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

மகாராஷ்டிராவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக  சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து உத்தவ் தாக்கரே  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்தநாளே அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே  பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சியை அமைத்தார்.  ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.  மகாராஷ்டிரா முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஏக்னாத் ஷிண்டே   சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில்,  பெரும்பான்மைக்கு தேவையான 144  வாக்குகளையும் தாண்டி  164  வாக்குகள் பெற்று ஏக்நாத் ஷிண்டே நன்பிக்கை  வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

maharastra

இந்நிலையில், மும்பையில் உள்ள  சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாவட்ட கட்சி தலைவர்களுடன் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது: சிவசேனாவை அழிக்க பாஜக சதி செய்து வருகிறது. பாஜகவுக்கு துணிவு இருந்தால் உடனடியாக மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தி, தேர்தலை சந்திக்கட்டும். தேவையற்ற அரசியல் விளையாட்டுகளை கைவிட்டு மக்களிடம் தீர்ப்பு கேட்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். யார் ஆட்சியில் இருக்க வேண்டும் யார் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.