மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே ராஜினாமா

 
Mallikarjuna Kharge

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே ராஜினாமா செய்துள்ளார். 

அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் நிலையில்,  மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8ம் தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 17ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறும் என்றும் 19 ஆம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர்,  ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

Mallikarjuna Kharge

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே ராஜினாமா செய்துள்ளார். ஒரு தலைவர், ஒரு பதவி என்ற தீர்மானத்தின்படி, எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.   இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். கார்கே பதவி விலகியதை தொடர்ந்து, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப சிதம்பரமும், திக்விஜய சிங்கும் போட்டியில் உள்ளனர்.