பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு

 
Mayawathi

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். 

நாட்டின் 15வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த மொத்தம் 776 எம்பிக்கள், மாநில சட்டமன்றங்களை சேர்ந்த 4033 எம்.எல்.ஏக்கள் என 4,809 மக்கள் பிரதிநிகள் சேர்ந்து வாக்களித்து குடியரசு தலைவரை தேர்வு செய்கின்றனர். இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.  இதேபோல் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே நேற்று நாடாளுமன்ற லோக்சபா செயலகத்தில் திரௌபதி முர்மு வேட்பு  மனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோருடன் தொலைபேசியில் பேசி ஆதரவு கோறியதாக கூறப்பட்டது. இதேபோல் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளதாக தகவல் வெளியானது. 

draupadi

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். இது பாஜகவுக்கு ஆதரவாகவோ, எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவோ எடுத்த முடிவு அல்ல எனவும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து எடுத்த முடிவு எனவும் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.