ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி..

 
பிரதமர் மோடி


ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி சென்றுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன்,  பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி,  ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும்  ஜி7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் இன்றும்( ஜூன் 26) ,  நாளையும்( ஜூன் 27)  நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்கள். இதற்காக நேற்று இரவு  தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது ஜி-7 நாடுகளின் தலைவர்களை  சந்தித்து, மோடி  பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மோடி

அத்துடன் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள இருக்கும் அர்ஜென்டினா,  இந்தோனேஷியா,  செனகல்,  தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களையும்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.   தொடர்ந்து  மியூனிக் நகரில்,  இந்திய  வம்சாவளியினரை சந்தித்து  உரையாற்ற உள்ளார்.

பிரதமர் மோடி பயணம்

பின்னர் இந்தியா திரும்பும் வழியில் ஜூன் 28 ம் தேதி அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யான் மறைவை ஒட்டி ,  அவரது மகனும்,  தற்போதைய மன்னரும் அதிபருமான ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யான் சந்தித்து இரங்கல் தெரிவிக்க  இருக்கிறார். இந்நிலையில் ஜெர்மனி சென்று சேர்ந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.