விரைவில் புதுச்சேரியில் திரைப்பட நகரம் -தமிழிசை அறிவிப்பு

 
po

பெரும்பாலான தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் புதுச்சேரி மாநிலத்தில் தான் நடந்து வருகிறது.  அம் மாநிலத்தில் தமிழ் மாநிலத்தை விட வரி குறைவு என்பதால் தான் அங்கே அதிகம் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன.   ஆனால் அங்கேயும் தற்போது வரி உயர்த்தப்பட்டதால் திரை உலக பிரபலங்கள் பலரும் புதுச்சேரி மாநில முதல்வரை சந்தித்து வரியை குறைக்க சொல்லி கோரிக்கை வைத்தனர்.

th

 அதே நேரம் புதுச்சேரியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரம் உருவாக்க வேண்டும் என்றும் அம் மாநில முதல்வரிடமும் ஆளுநரிடமும் திரையுலக பிரபலங்கள் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து வந்தனர்.  இந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதுச்சேரியில் திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

 புதுச்சேரி மாநிலத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றானது 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாவரவியல் பூங்கா.  இந்த பூங்காவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 60 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட இருக்கிறது.  அதை முன்னிட்டு புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு அமைய இருக்கும் பல்வேறு வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

pon

பின்னர்  செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர் .  அப்போது,   200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தாவரவியல் பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 60 கோடி செலவு செய்து புனரமைக்கப்பட இருக்கிறது.   மூத்த குடிமக்கள் தங்குவதற்கான இடம், தாய்மார்களுக்கு தனி இடம், பள்ளி மாணவர்களுக்கான இடம், நடைபயிற்சி மேற்கொள்ளும் இடம் என்று அனைத்து வசதிகளும் இங்கே செய்யப்பட உள்ளது.   மேலும் சிறுவர்கள் ரயில்,  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,  நவீன கழிவறை வசதிகள் ,பூங்காவை சுற்றி பார்க்க பேட்டரி கார் வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார் .

அவர் மேலும்,  புதுச்சேரியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தப்பட இருக்கிறது . அந்த வகையில் திரை உலக பிரபலங்களின் கோரிக்கைகளை ஏற்று சவுண்ட் தியேட்டர்,  ரெக்கார்டிங் வசதிகளுடன் கூடிய ஒரு முழுமையான திரைப்பட நகரம் புதுச்சேரியில் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.