சர்வதேச கல்வி மையமாக இந்தியா உருவெடுக்கும் - பிரதமர் மோடி

 
modi

வரும் ஆண்டுகளில் சர்வதேச கல்வி மையமாக இந்தியா உருவெடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 
 
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மூன்று நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கல்வித் திட்டம் என்பது வெறும் பட்டமளிப்புடன் முடிந்து விடும் விஷயமாக இருக்கக்கூடாது.நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான மனித ஆற்றலை உருவாக்குவதாக இருக்க வேண்டும். ஆங்கிலேயர்கள், தங்களுக்கு வேலை செய்வதற்கான ஆட்களை தயார்படுத்தும் விதத்தில், இந்தியாவில் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.  ஆங்கிலேயர்கள் 'வேலைக்காரர் பிரிவு' என்பதை உருவாக்க அமல்படுத்திய கல்வி திட்டத்தில் சுதந்திரத்திற்குப் பின் சில மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் பல அம்சங்கள் அப்படியே நீடிக்கின்றன. அவற்றை சீர்திருத்துவதுதான் புதிய தேசிய கல்வித் திட்டத்தின் நோக்கம்.

modi

குழந்தைகள் கூட இன்று இணையதளம் மூலம் கேள்விகளுக்கு உரிய பதிலை வழங்குகிறார்கள். அவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் கல்வி மையங்களில் நுழையும்போது, அங்கு அவர்களுக்கான அறிவார்ந்த சூழல் நிலவ வேண்டும். அதற்கான வாசலாக அனைத்து மொழிகளிலும் புதிய தேசிய கல்வித் திட்டம் அமையும்.வரும் ஆண்டுகளில் சர்வதேச கல்வி மையமாக இந்தியா உருவெடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த மாநாட்டில் புதிய சிந்தனைகள், புதிய உத்திகள் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.