அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

 
modi

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார் 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து பிரதமர் மோடி இன்று  இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவிற்கு செல்கிறார். சிம்லாவில் நடைபெறும் ஏழை மக்கள் நலன் காக்கும் கரீப் கல்யான் திட்ட மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்துகிறார். இதனை தொடர்ந்து, அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் உள்ளடக்கிய 16 திட்டங்கள் குறித்து பயனாளிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.  மத்திய அரசின் திட்டங்கள் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளதா என ஆராய இந்த கலந்துரையாடல் உதவும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் இன்று நடைபெறும் விழாவில், 10 கோடிக்கும் மேலான விவசாய குடும்பங்கள் பயன்பெறும் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 11வது தவணையை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

PM Modi


 
இதனை தொடர்ந்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார். இந்த கலந்துரையாடலில், நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள், நாட்டின் சட்டம் ஒழுங்கும், இதேபோல் வருகிற சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாட்டின் தற்போதைய கொரோனா நிலை குறித்தும், குரங்கம்மை நோயின் தாக்கம் குறித்தும் பிரதமர் பேசலாம் என கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து பிரதமர் மோடி இன்று ஆற்றவுள்ள உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  இதுதவிர அனைத்து மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரை நிகழ்த்துகிறார்.