வீட்டில் தேசிய கொடி ஏற்ற ஆர்வம் காட்டி வரும் மக்கள் - பிரதமர் மோடி மகிழ்ச்சி

 
PM Modi

வீட்டில் தேசிய கொடி ஏற்றி மக்கள் ஹர்கர் திரங்கா இயக்கத்திற்கு பெரும் ஆதரவு அளித்து வருவது பெரும் மகிழ்ச்சியை தருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.  அதன் அடிப்படையில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,  திரை பிரபலங்கள்  என பலரும் தேசிய கொடியை சமூக வலைத்தளங்களின் பக்கங்களின் முகப்பு படங்களாக மாற்றி வருகின்றனர். பொதுமக்கள் பலரும் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தங்கள் இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். 

இந்நிலையில், மக்கள் ஹர்கர் திரங்கா இயக்கத்திற்கு பெரும் ஆதரவு அளித்து வருவது பெரும் மகிழ்ச்சியை தருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  ஹர்கர் திரங்கா இயக்கத்திற்கு ஆச்சரியப்படும் வகையில் மக்கள் அளித்து வரும் ஆதரவால் அதிக மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்துள்ளேன். வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் உள்ள மக்கள் இதில் பங்கு பெறுவதனை நாம் காண முடிகிறது. இதுவே ஆசாதி கா அம்ரித் மகோத்சவ கொண்டாட்டத்தின் ஒரு சிறந்த வழியாகும் என தெரிவித்து உள்ளார். மேலும் தேசிய கொடியுடன் உள்ள புகைப்படங்களை harghartiranga.com என்ற இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளும்படியும் பிரதமர் மோடி மக்களை கேட்டு கொண்டுள்ளார்.