சிறந்த ஆரோக்கியத்திற்கும், உடல் நலனுக்கும் யோகா செய்யுங்கள் - பிரதமர் மோடி தமிழில் டுவீட்

 
modi

சிறந்த ஆரோக்கியத்திற்கும், உடல் நலனுக்கும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில்  பதிவிட்டுள்ளார்.

உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் கொடுக்கும் அரிய கலை யோகா. இந்த யோகா கலை பல்வேறு நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. இந்த யோகா கலையை உலகமெங்கும் பரப்பும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஐ.நா. சபையில் உரையாற்றினார்.அப்போது அவர் உலக அளவில் யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதன்படி , உலக நாடுகளின் ஆதரவுடன் ஆண்டு தோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி முதல் சர்வதேச யோகா தினம், 2015ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டது
.இதேபோல் மத்திய அரசின் சார்பில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, நாடு முழுவதும் யோகா பயிற்சி குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன. இதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளாக யோகா பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தலைவர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களும் யோகாவை வழக்கமாகப் பயிற்சி செய்து வருகின்றனர். 



 
இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு யோகா குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி தமிழிலும் டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த டுவிட்டர் பதிவில், தொற்றா நோய்களும் வாழ்க்கை முறை சிக்கல்களால் ஏற்படும் உடல்நல சீர்கேடுகளும் , குறிப்பாக   இளம் வயதினரிடையே  பெருகி வரும் தற்காலச் சூழலில் , யோகா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. சிறந்த ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.