எதிர்க்கட்சிகள் அமளி - 2வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு

 
parliament parliament

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.   இந்தக் கூட்டத் தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தொடங்கிய  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் , புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவை தொடங்கியவுடன் அரிசி, தயிர் உள்ளிட்ட பண்டல் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். மாநிலங்களவை மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Parliament

இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அந்தந்த சபாநாயகர்கள் அறிவித்தனர். முன்னதாக அவை தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.