நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : பிபிசி ஆவணப்பட தடை விவகாரத்தைக் கிளப்ப எதிர்கட்சிகள் திட்டம்..

 
Parliament

நாளை மறுநாள் தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் தடை விதிக்கப்பட்ட விவகாரங்கள் புயலை கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  உரையுடன் தொடங்குகிறது.  இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக 30ம் தேதி (நாளை) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.   இதனைத்தொடர்ந்து   பிப்ரவரி 1ம் தேதி அடுத்த நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்கிறார். குடியரசு தலைவர் உரை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இரு நாட்களிலும் நேரமில்லா நேரம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாடாளுமன்றம்

இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள்,  பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு தடைவிதிப்பு,  நாடாளுமன்ற மற்றும் சட்ட சபைகளில்  மகளிருக்கு 33  சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட  விவகாரங்களை கிளப்ப முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  நாளை மறுநாள் கூடும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6 தேதி வரை 27 அமர்வுகளாக மொத்தம் 66 நாட்கள் நடைபெற உள்ளது.  இடையில் பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை நாடாளுமன்றம் செயல்படாது. இதில்  முதல் கட்ட கூட்டத்தொடர், பழைய கட்டடத்திலேயே நடத்தப்படும் என்றும்,  பணிகள் நிறைவடைந்து விட்டால், இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.