லதா மங்கேஷ்கர் மறைவு - குடியரசுத் தலைவர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்...

 
லதா மங்கேஷ்கர்

இந்தியாவின் இசைக்குயில் என போற்றப்படும்  பழம்பெரும்  பாடகி லதா மங்கேஷ்கர்  இயற்கை எய்தினார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள்  அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

1929 ஆம் ஆண்டு பிறந்த லதா மங்கேஷ்கர்,  தனது 4 வயதில்  இசையுலகில் அடியெடுத்து வைத்தவர்.  தமிழ், இந்தி, பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில்  சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.  தனது காந்தக் குரலால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக  இசையுலகை கட்டியாண்டு வந்த லதா மங்கேஷ்கர் இன்று காலை இயற்கை எய்தினார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  92 வயதான லதா மங்கேஷ்கருக்கு வயது மூப்பின் காரணமாக தொடர்ந்து ஐசியு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை  அவர் காலமானார். இன்று மாலை அவரது உடல்  தகனம் செய்யப்பட இருகிறது. முழு அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்படும் என மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ லதா-ஜியின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோருக்கு ஏற்பட்டுள்ளதைப் போலவே எனக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது. அவரது பாடல்கள், இந்தியாவின் சாராம்சத்தையும் அழகையும்  வெளிப்படுத்தும். பாரத ரத்னா, லதாஜியின் சாதனைகள் ஒப்பிட முடியாததாக இருக்கும்.

 சகோதரி லதா விதிவிலக்கான மனிதராக இருந்தார்.  அன்பு நிறைந்தவர். , நான் அவரை  சந்திக்கும் போதெல்லாம் பார்த்திருக்கிறேன். . தெய்வீகக் குரல் என்றென்றும் அமைதியாகிவிட்டது, ஆனால் அவருடைய மெல்லிசைகள் அழியாமல் இருக்கும்,  எப்போதும்  எதிரொலிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், எங்கும் உள்ள ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்கள் “ என்று தெரிவித்துள்ளார்.


இதேபோல்  காங்கிரஸ்  எம்.பி.,  ராகுல் காந்தி , “ லதா மங்கேஷ்கரின் மறைவு சோகமான செய்தி கிடைத்தது. பல தசாப்தங்களாக இந்தியாவின் மிகவும் பிரியமான குரலாக இருந்தார். அவரது தங்கக் குரல் அழியாதது மற்றும் அவரது ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்கள்.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  இசையுலகில் எட்டு தசாப்தங்கள் நீடித்த அவர்,  பல்வேறு மொழிகளில் தனது மெல்லிய குரலால்  ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொட்டுள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”அவளது காந்தக் குரல் நம் அனைவரையும் கவர்ந்தது. இனிய குரலுக்கு ராணி என்றால் அது லதா மங்கேஷ்கர் ஜியாகத்தான் இருக்க வேண்டும்.  சர்வவல்லமையுள்ள இறைவன் இன்று அவரை  அழைத்துக்கொண்டதால்,  நம் தேசத்திற்கு ஒரு பெரிய வெற்றிடமும் இழப்பும் ஏற்பட்டுள்ளது.  லதாஜியின் குரல் நம்மைப் போன்ற லட்சக்கணக்கான மக்களை மயக்கிக்கொண்டே இருக்கும்

ஹே மேரே வத்தன்கி லோகோ...  என்று எல்லைப்புற வீரர்களின் தியாகத்தை லதா மங்கேஷ்கர் அவர்கள் பாடிய போது நாடே அழுதது.. அவர் மறைவு செய்தி கேட்டு இன்றும் அழுகிறது.  அந்த இசைப் பேரரசியின் இசை நிரந்தரமானது... அவர் குரல் அமரத்துவமானது... மனதில் வாழும் அவருக்கு மரணமில்லை. ஓம் சாந்தி ஓம்!” என்று  குறிப்பிட்டுள்ளார்.


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “ பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். இந்திய இசை வரலாற்றில் அழியாத தடம் பதித்த இணையற்ற இசைக்கலைஞர் அவர். அவரது பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.” என்று தெரிவித்திருக்கிறார்.

ஆந்திர முதலமைச்சர் ஜெஹன் மோகன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “ லதா மங்கேஷ்கர் இப்போது நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரின் இனிய குரல் என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கூறியிருக்கிறார்.