இமாச்சலபிரதேசத்தின் முதல்வர் ஆகிறார் பிரியங்கா காந்தி ?

 
Priyanka gandhi

இமாச்சலபிரதேசத்தின் முதலமைச்சராக பிரியங்கா காந்தி நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைக்கே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. . வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இரண்டு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி ஏற்படலாம் என கருதப்பட்டது. ஆனால் பிற்பகல் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்றது. மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதனிடையே நேற்று மாலை 40 பேர் கொண்ட எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வரை தேர்ந்தெடுக்க கட்சி மேலிடத்திற்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி மேலிடம் நாளை இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  முதல்வருக்கான போட்டியில் சுக்வீந்தர் சிங் சுகு, முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், பிரியங்கா காந்தியின் பெயரும் முதல்வருக்கான பரிசீலனையில் உள்ளது என கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்திற்கு தலைமை தாங்கிய முதல் வெற்றி இதுவாகும். எனவே பிரியங்காவை கவுரவப்படுத்தும் வகையில் அவரை முதல்வர் ஆக்கலாம் என மூத்த தலைவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.