பாஜகவின் அடிமையாகிவிட்டார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி - நாராயணசாமி விமர்சனம்

 
Narayanasamy

தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்காக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பா.ஜ.கவிடம் அடிமையாகிவிட்டார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். 
 
ராணுவத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'அக்னிபத்' திட்டத்தை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் சாரம், பேருந்து நிலையம், மிஷன் வீதி உள்ளிட்ட 16 இடங்களில் தர்ணா போராட்டம் நடந்தது. மிஷன் வீதியில் நடைபெற்ற போராட்டத்தில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். அப்போது நாராயணசாமி பேசியதாவது: அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இத்திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. ஆனால், பிரதமர் மோடி, மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, ஆட்சியை கவிழ்க்கும் வேலையை பார்க்கிறார். சிவசேனாவில் இருந்து ஓடியவர்களை அம்மாநில மக்கள் ஓட ஓட விரட்டி அடிக்கின்றனர். ஆனால், புதுச்சேரியில் கட்சி மாறிகளுக்கு ஓட்டு போடுகின்றனர். அந்த நிலை மாற வேண்டும்.

தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகள் எதுவும் நடக்கவில்லை. மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பி., பதவியை பா.ஜ.க எடுத்துக் கொண்டது போல், வரும் லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.க. தான் போட்டியிடப் போகிறது. இந்த நிலையிலும், முதலமைச்சர் ரங்கசாமி தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.,விடம் ரங்கசாமி அடிமையாக உள்ளார். புதுச்சேரி வளர்ச்சி பெற வேண்டுமானால், மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். தற்போதைய முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி மக்களுக்கு எதையும் செய்யவில்லை. அவர் எத்தனை நாள் முதல்வராக இருப்பார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
 இவ்வாறு நாராயணசாமி பேசினார்.