பஞ்சாப்பில் தற்போதைய முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோருக்கு பின்னடைவு

 
punjab

பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், முதலமைச்சர் சரண்ஜித் சிங், முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் நவோஜ் சித்து உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலத்தில்கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.இந்நிலையில், சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மார்ச் 23-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவி வரும் நிலையில், அங்கு ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் மிஞ்சி முன்னிலை வகிக்கிறது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் 59 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தற்போது வரை 87 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

punjab

முதலமைச்சர் சரண்ஜித் சிங், காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் நவோஜ் சித்து உள்ளிட்டோர் முதல் சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளனர். பாதாவூர் மற்றும் ஜாம்கவுர் சாஹிப் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் சரண்ஜித் சிங் இரண்டு தொகுதிளிலுமே பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு ஆம் ஆத்மி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். 
பாடியாலா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் முதல் சுற்றில் வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியுள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித்பால் கோஹ்லி முதல் சுற்றில் முன்னிலை பெற்றார். அமிர்தரஸ் கிழக்கில் போட்டியிட்ட நவோஜ் சித்துவும் ஆம் ஆத்மி வேட்பாளரை விட பின் தங்கியுள்ளார்.