உத்தரகாண்ட் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் புஷ்கர் சிங் தாமி

 
pushkar singh dhami

உத்தரகாண்ட் முதலமச்சராக பாஜகவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமி நாளை அம்மாநில முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். 

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 14-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெற்ற நிலையில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இருந்தபோதிலும் கதிமா சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இது அவருக்கு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் தொடர்ந்து அம்மாநிலத்தில் நீடித்து வந்தது.

pushkar singh

இந்நிலையில்,    நேற்று அம்மாநில பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புஷ்கர் சிங் தாமி சட்டமன்ற கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புஷ்கர் சிங் தாமி போட்டியிட்ட தொகுதியில் தோல்வியை தழுவியிருந்தாலும் பாஜக அம்மாநிலத்தில் பெற்ற அமோக வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய பங்காற்றினார்.இதன் காரணமாகவே அவர் முதலமைச்சராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமி சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்பதால் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் அவர் வேறு ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும். அப்படி அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் மட்டுமே அவரால் முதலமைச்சராக நீடிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.