மறைந்த பஞ்சாபி பாடகரின் குடும்பத்தை இன்று சந்தித்து ஆறுதல் கூறுகிறார் ராகுல் காந்தி

 
rahul

மறைந்த பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூசேவாலா குடும்பத்தை இன்று நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் சொல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில், 424 பிரபலங்களுக்கு அளித்து வந்த பாதுகாப்பை போலீசார் தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர். இதில் பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலாவுகு அளிக்கப்பட்ட பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது. 
பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்ட மறுநாள், காங்கிரஸ் பிரமுகரும், பிரபல பஞ்சாபி பாடகருமான சித்து மூசேவாலா, மான்சா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாபை சேர்ந்த நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் வடஅமெரிக்க நாடான, கனடாவில் உள்ள கோல்டி பிரார் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சித்து மூசேவாலா கொலை வழக்கில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில்,  மூன்றாவது குற்றவாளியாக தேவிந்தர் என்பவரை, போலீசார் நேற்று முன் தினம் ஹரியானாவில் கைது செய்தனர்.  

sidhu moose wala

இந்நிலையில் சித்து மூசேவாலா குடும்பத்தை இன்று நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் சொல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகலில் ராகுல் காந்தி சித்து மூசேவாலாவின் சொந்த ஊருக்கு சென்று அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.