வந்தே பாரத் ரயில் டிசைன் விமானத்தை விடவும் சிறந்தவை.. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

 
வந்தே பாரத் ரெயில்

வந்தே பாரத் ரயில் டிசைன் விமானத்தை விடவும் சிறந்தவை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமையாக தெரிவித்தார்.

தெலங்கானா மற்றும் ஆந்திராவை இணைக்கும் வகையில், செகந்திரபாத்-விசாகப்பட்டிணத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்  சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை செகந்திரபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான (700 கி.மீ.)  நேர பயணத்தை  12 மணி நேரத்தில் இருந்து 8.5 மணி நேரமாக குறைக்கும். செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். 

அஸ்வினி வைஷ்ணவ்

அங்கு கூட்டத்தில் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில் கூறியதாவது: வந்தே பாரத் ஒரு சிறந்த ரயில். இது 0-100 கி.மீ. வேகத்தை 52 வினாடிகளில் எட்டி பயணிக்க முடியும். அதேசமயம் உலகின் மற்ற ரயில்களுக்கு 54 முதல் 60 வினாடிகள் ஆகும். வந்தே பாரத்தின் வடிவமைப்புகள் (டிசைன்) விமானத்தை விடவும் சிறந்தவை. இது மிகவும் வசதியான பயண அனுபவத்தை அளிக்கும். பிரதமர் மோடி தெலங்கானாவுக்கு ரூ.3,500 கோடி வழங்குகிறார். 

மோடி

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தெலங்கானாவில் ரயில்வேயை சிறந்த முறையில் மேம்படுத்த வேண்டும். செகந்திராபாத் ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மேம்படுத்தப்படும். இந்த ரயில் நிலையத்துக்கும், தெலங்கானாவில் உள்ள 35 ரயில் நிலையங்களுக்கும் பிரதமர் மோடி ரூ.720 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.