விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோச்சிக்குச் சொந்தமான ரூ.19 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்..

 
விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி


பிரபல தொழில் அதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோச்சி ஆகிய 3 பேருக்கு சொந்தமான  ரூ. 19,111  கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களாக வலம் வந்த  விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகிய 3 பேரும்  தங்கள் நிறுவனங்கள் மூலம்  பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி  கடன் பெற்று பல ஆயிடம் கோடி  நிதி மோசடியில் ஈடுபட்டனர்.  அதன்படி ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் மோசடி செய்து அரசுக்கு இழப்பினை ஏற்படுத்தி உள்ளனர்.  பின்னர் வெளிநாடுகளுக்குச் தப்பிச் சென்ற அவர்களை இந்தியா அழைத்து வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், தற்போது வரை எதுவும் பலனளிக்கவில்லை.  

விஜய் மல்லையா

இந்நிலையில்,  விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் ஆகிய 3 பேரின் சொத்துகள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த  மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி,  3 பேரும்  தங்களது நிறுவனங்கள் மூலமாக பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி, ரூ. 22,585. 83  கோடி ( 22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் )  இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.

மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியின் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி சொத்துகள் வங்கிகளுக்கு மாற்றம் – அமலாக்கத் துறை அதிரடி!

கடந்த ( மார்ச்) 15-ந் தேதி நிலவரப்படி,  இந்த 3 பேருக்குச் சொந்தமான ரூ.19, 111. 20 கோடி ( 19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம்)  மதிப்புள்ள சொத்துக்கள், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவற்றில்   பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 113 கோடியே 91 லட்சம் சொத்துகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ரூ.335. 6 கோடி மத்திய அரசு  பறிமுதல் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மார்ச்  15-ந் தேதி நிலவரப்படி, மோசடி செய்யப்பட்ட  மொத்த தொகையில் இருந்து  84.61 சதவீதம் சொத்துக்கள் முடக்கப்பட்டு,  அவற்றில் 66.91% சொத்துக்கள்  வங்கிகளிடமும், மத்திய அரசிடமும் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.  அமலாக்கத்துறை ஒப்படைத்த சொத்துக்களை விற்பனை செய்து   பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு  ரூ.7,975.27 கோடியை ஈட்டியுள்ளதாகவும் மாநிலங்களவையில் அமைச்சர் தெரிவித்தார்.