நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி

 
nupur sharma

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த பாஜக முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், நுபுர் சர்மா தொலைக்காட்சியில் தோன்றி தனது கருத்துக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றி பங்கேற்று பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து அவதூறாகவும், சர்ச்சையாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்தது பாஜக. நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டன. மேலும் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டன.

supreme court

இந்நிலையில், முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்த்ல் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், நுபுர் ஷர்மாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். .ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதாலேயே எதையும் பேசிவிட முடியாது எனவும், நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா? அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா? என கேள்வி எழுப்பினர். 
நுபுர் சர்மா நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார் எனவும், உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான் எனவும் தெரிவித்தனர்.  
தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டனர். .ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்றால், நீங்கள் இதுபோல் எது வேண்டுமானாலும் சொல்வதற்கு லைசன்ஸ் இல்லை எனவும் நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளனர்.