சோனியா வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை

 
c

 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் ஏழாம் தேதி தொடங்குகிறது.  இந்த குளிர்கால கூட்டத்தொடர் முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள்.

 காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்று கொண்ட பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இது.  இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து இன்று ஆலோசனை நடைபெறுகிறது. 

m

முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும்,  நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.   இந்த கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி,  மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெயராம் ரமேஷ்,  மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடா சுரேஷ் ஆகியோர் பங்கேற்கிறார்கள் . 

முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம் , மனிஷ் திவாரி ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 

 குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் பின்பற்ற வேண்டிய உக்திகள் குறித்து இதில்  முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.