தெலங்கானாவில் என்னை யாரும் விரட்டவில்லை - நாராயணசாமிக்கு தமிழிசை பதில்

 
Tamilisai

தெலங்கானாவில் தமிழிசை சௌந்தரராஜன் விரட்டப்படுவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், அவருக்கு தமிழிசை கடிதம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். 

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் அவர்கள் எந்த துறையில் எந்த பதவியில் இருந்தாலும் மக்கள்சேவைதான் பிரதான பணி என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை. புதுவை தலைமை செயலாளரிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன். அரசு செயலாளர்கள், கலெக்டர்கள், துறை தலைவர்கள் என்று அனைத்து அதிகாரிகளும் அலுவலக பணிகளை விடுத்து மக்களை சந்திக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மக்களின் குறைகளை கேட்கவேண்டும் என்று கூறியிருக்கிறேன்.   இதற்கான சுற்றறிக்கை அனுப்ப கேட்டுள்ளேன். அதற்கு அவரும் இசைவு தெரிவித்துள்ளார். அதேபோல நானும் என்னை சந்திக்க விரும்பி முன்பதிவு செய்யும் பலரையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன். ஆனால் மின்னஞ்சல் போன்றவை மூலமாக தொடர்புகொள்ள முடியாதவர்கள் குறிப்பிட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டால் நாங்கள் தங்களை சந்திக்க வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டதால் மக்களை சந்திக்க மாதத்தில் 2 நாட்கள் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன். இது யாருடைய அதிகாரத்திலும் தலையிடுவதாக ஆகாது.

Narayanasamy

மக்களை சந்திக்கும் பழக்கம் எனக்கு நெடுநாட்களாகவே இருந்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் நான் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். மாணவர்களையும், பெண்களையும் சந்திப்பதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன்.  நான் பதவியேற்ற முதல் வாரத்திலேயே பிரஜா தர்பார் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவேன் என்று அறிவித்தேன். இது யாருடைய, எந்த நிகழ்வின் தொடர்ச்சியும் அல்ல. நானே முடிவெடுத்து சந்தித்து வருகிறேன். தெலுங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கூறியதைப்போல் அங்கு யாரும் என்னை விரட்டவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. அங்கு என்னுடைய பணி தீவிரமாகவே இருக்கிறது. இந்த கடிதத்தோடு தெலுங்கானா மாநிலத்தில் நான் 3-ம் ஆண்டில் செய்த அன்றாட பணிகளை பற்றிய 498 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தங்களது பார்வைக்கு அனுப்பியுள்ளேன். இவ்வாறு தமிழிசை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.