திருப்பதி கோவிலில் பவித்ரோற்சவம் வருகிற 8ம் தேதி தொடக்கம்

 
Tirupathi Tirupathi

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வருகிற 8ம் தேதி தொடங்குகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக புகழ்பெற்ற கோவில் ஆகும். இங்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதேபோல் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று வருகின்றனர். கோவிலில் ஆண்டு முழுவதும் நடந்த அர்ச்சனைகள், திருவிழாவின்போது பக்தர்கள், கோவில் ஊழியர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகின்ற தோஷத்தால், கோவிலின் புனிதம் பாதிக்கப்படாமல் இருக்க பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. 

அந்த வகையில் வருகிற 8ம் தேதி முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணி வரை 3 நாட்கள் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை கோவிலின் நான்கு மாட வீதிகளில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 8-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 9-ந்தேதி பவித்ர சமர்ப்பணம், 10-ந்தேதி பூர்ணாஹுதி நிகழ்ச்சிகள் நடக்கிறது. பவித்ரோற்சவத்தையொட்டி 7-ந்தேதி அங்குரார்ப்பணம் நடப்பதால் சஹஸ்ர தீபலங்கார சேவை, 9-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதன சேவை, 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.