இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெரும்பான்மையை நிரூபிப்பாரா ஏக்நாத் ஷிண்டே..??

 
eknath shinde

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  இன்று மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.  புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே  பெரும்பான்மையை நிரூபிப்பாரா ? என்கிற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.   

மகாராஷ்டிராவில்  கடந்த இரண்டரை ஆண்டுகளாக  சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி துக்கினர்.  அதிருப்தி எம்.எல்.ஏக்கள்  ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்து  அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றனர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.   இதனையடுத்து  கடந்த புதன்கிழமை  உத்தவ் தாக்கரே  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  அடுத்தநாளே  ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணியில் புதிய ஆட்சி அமைந்தது.  

மகாராஷ்டிரா முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே

அதிருப்தி ஏம்.எல்.ஏக்கள் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவைட் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.  மகாராஷ்டிரா முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஏக்னாத் ஷிண்டே  இன்று  ( திங்கள் கிழமை)  சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், நேற்று  சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது.  இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த சிறப்பு கூட்டத்தில் முதல் நாளான நேற்று,  சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 288 உறுப்பினர்கள் கொண்ட  மகாராஷ்டிரா சட்டப்பேரவையில்  இந்த சபாநாயகர் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே- பாஜக கூட்டணி சார்பில் பாஜகவைச் சேர்ந்த ராகுல் நர்வேகர்  புதிய சபாநாயகராக  தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக  164 வாக்குகளும், எதிராக 107 வாக்குகளும் பதிவானது.

மகாராஷ்டிரா முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே

இதனைத்தொடர்ந்து இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது,  புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  ராகுல் நர்வேக்கர்  இந்த  நம்பிக்கை வாக்கெடுப்பை  முன்னின்று நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாஜகவிடம் 106 எம்.எல்.ஏக்களும், ஏக்நாத் ஷிண்டேவிடம் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் உள்ளனர். அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சியிடம் 44 எம்.எல்.ஏக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிப்பார்   என எதிர்ப்பார்க்கப்படுகிறது.