ஹேக் செய்யப்பட்ட UGC டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது.

 
UGC

அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்ட யூஜிசியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டது.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலம், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த டுவிட்டர் பக்கத்தை சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.  இந்த டுவிட்டர் கணக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ugc

இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் டுவிட்டர் கணக்கு, மர்ம நபர்களால் இன்று அதிகாலை முடக்கப்பட்டது. இந்த டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட பின்னர், அதில் பல அர்த்தமற்ற பதிவுகள், பல்வேறு நபர்களை டேக் செய்து போடப்பட்டு வந்தது.. அதன் முகப்பு படத்தில் கார்ட்டூன் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதிகாலை நேரத்தில் ஹேக் செய்யப்பட்ட யூஜிசியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட நிலையில், இன்று யுஜிசியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்படுவது  நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.