தேசிய கொடி ஏற்றாத வீடுகளை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் - பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

 
bjp

தேசிய கொடி ஏற்றாத வீடுகளை கண்காணித்து தனக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என உத்ரகாண்ட்  மாநில பாஜக தலைவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் எனவும், சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.  அதன் அடிப்படையில் பொதுமக்களும் , விளையாட்டு வீரர்கள்,  திரை பிரபலங்கள்  என பலரும் தேசிய கொடியை சமூக வலைத்தளங்களின் பக்கங்களின் முகப்பு படங்களாக மாற்றி வருகின்றனர். அத்துடன் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தங்கள் இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். 
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ரஜினிகாந்த், விளையாட்டு வீரர் மகேந்திர சிங் தோனி உள்ளிட்டோரும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினர். 

National Flag

இந்நிலையில், தேசிய கொடி ஏற்றாத வீடுகளை கண்காணித்து தனக்கு புகைப்படம் எடுத்து அனுப்புமாறு உத்ரகாண்ட்  மாநில பாஜக தலைவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட், மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுகிறார்களா என்பதை நாம் பார்க்க வேண்டும்.அப்படி ஏற்றாதவர்கள் தேசிய உணர்வு கொண்டவர்களா என்ற ஐயம் மனதில் எழுகிறது. உண்மையான தேசப் பற்று கொண்டவர்கள் வீட்டில் தேசியக் கொடி ஏற்றுவார்கள். எனவே, தேசியக் கொடி ஏற்றாதவர்கள் யார் என கண்டறிந்து புகைப்படங்களை எனக்கு அனுப்புங்கள் என்றார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கமளித்துள்ள மகேந்திர பட், தான் கூறிய கருத்து பாஜக தொண்டர்களுக்குதான் எனவும், பொதுவான கருத்தை கூறவில்லை எனவும் கூறினார்.