விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட லக்கிம்பூர் தொகுதிகளில் பாஜக முன்னிலை

 
up

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட லக்கீம்பூரில் உள்ள 8 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா முன்னிலையில் உள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை இந்தியா முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என்று நான்கு கட்சிகள் மோதினாலும், பா.ஜ.க, சமாஜ்வாடி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பா.ஜ.க சார்பில் யோகி ஆதித்யநாத்தும், சமாஜ்வாடி சார்பில் அகிலஷ் யாதவ்வும் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டுள்ளனர்.

up

வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் இதுவரை பாஜக 249 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி 108 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனிடையே விவசாயிகள் பேரணியின் போது 8 விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட லக்கிம்பூரில் உள்ள 8 தொகுதிகளிலுமே பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றியதில் 8 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்தலிலும் இது பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்குள்ள 8 தொகுதிகளிலுமே பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் தாண்டி பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளதால், உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது.