ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் யார் பக்கம்?? டெல்லியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு தாவியதாகக் கூறப்படுவதை யடுத்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

டெல்லியில் முதல்வர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தங்கள் வசம் ஈர்க்க பாஜக பேரம் பேசி வருவதாக அக்கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அண்மையில் முறைகேடு புகாரில் சிக்கிய அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோசியவிடம் , பாஜகவில் இணைந்தால் அவர் வழக்குகளை ரத்து செய்வதாக அக்கட்சி தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல், ஆம் ஆத்மி எம்.எல்ஏக்கள் 40 பேரிடம் பாஜவில் இணைந்தால் ரூ.20 கோடி கொடுப்பதாகவும், மற்றொரு நபரை சேர்த்துவிட்டார் ரூ. 25 கோடி கொடுப்பதாகவும் அக்கட்சியில் இருந்து பேரம் பேசப்பட்டதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியிருந்தது.

இதனை பாஜக முற்றிலுமாக மறுத்து வருகிறது. அதேநேரம் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதாக செய்திகள் உலா வருகின்றன. இதனையொட்டி இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சட்டமன்றத்தில், இன்று ஆம் ஆத்மி கட்சி மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர அக்கட்சி முடிவு செய்தது. பொதுவாக ஒரு மாநிலத்தில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தாலோ அல்லது ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தாலோ நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கும். ஆனால், டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனக்குத்தானே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திக் கொள்ள முடிவு செய்திருக்கிறது.
அதன்படி இன்று நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு டெல்லி சட்டமன்றத்தில் நடைபெற இருக்கிறது. எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல் குறித்து மக்கள் பலரும் தன்னிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்புவதாகவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு உள்ளது? என்பதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வர விரும்புவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


