நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது - வருகிற 29ம் தேதி வரை நடைபெறுகிறது
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கியது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் வருகிற 29 தேதி வரை 17 அமர்வுகளாக கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடக்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது: அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இளம் எம்.பி.க்கள், புதிய எம்.பி.க்கள், முதல் முறை எம்.பி.க்களுக்கு கூட்டத்தொடர் விவாதத்தின் போது அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அமளி, போராட்டங்களால் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் தடைபடும்போது கற்றல் மற்றும் புரிதல் இன்மை ஏற்படுவதாக இளம் எம்.பி.க்களுக்கு என்னிடம் கூறியுள்ளனர். ஆகையால், நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவது முக்கியம். நாடாளுமன்றம் ஒத்துவைக்கப்படுவதால் பேச வாய்ப்பு கிடைக்காமல் இழப்பு ஏற்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கூறுகின்றனர். ஆகையால், எம்.பி.க்களின் வலியை எதிர்க்கட்சி தலைவர்களும், அனைத்து கட்சியினரும் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு கூறினார்.


