’பிகினியோ.. ஹிஜாப்போ.. அது அவர்கள் உரிமை.. நீங்கள் நிறுத்துங்கள்..- பிரியங்கா காந்தி கண்டனம்..

 
பிரியங்கா காந்தி


பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று முடிவு செய்வது  அவர்களது உரிமை என்றும், பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம்  உடுப்பியில் உள்ள பியூசி கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை  விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்துத்துவ மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். ஒருபுறம் இஸ்லாமிய மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பட்டியலின மாணவர்கள் நீலத்துண்டு அணிந்துவந்தனர்.

hijab

இதனையடுத்து கர்நாடகாவில்  ஹிஜாப் - காவித்துண்டு பிரச்சனை தொடர்பான  மாணவர்கள் போராட்டம் கலவரமாக மாறியது.  இதில் உச்சகட்டமாக ஒரு கல்லூரியில் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய கம்பத்தில், காவிக்கொடியை ஏற்றி இந்துத்துவா மாணவர்கள் செய்த அட்டூழியம்  pஎரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைத்தனர்.  பூதாகரமாக வெடித்த இந்த ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடகாவில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Priyanka Gandhi

கர்நாடகாவில் இகழும் இந்த அசாதாரண சூழல் குறித்து பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது ட்விட்டர் பதிவில், “ பிகினியோ.., முக்காடோ.., ஜீன்ஸோ.. அல்லது  ஹிஜாப்போ., அவர்கள் என்ன அணிய வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு...   இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் அதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.  பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.