மணிப்பூர் புறப்பட்டுச் சென்ற இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குழு..

 
மணிப்பூர் புறப்பட்டுச் சென்ற இந்தியா கூட்டணி எம்.பிக்கள் குழு..

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய, 'I.N.D.I.A' கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் மணிப்பூர் சென்றனர்.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3-ந்தேதி பேரணி நடத்தினர். அந்த பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, மணிப்பூர் மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இதுவரை இந்த கலவரத்தால்160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட 50,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.manipur
இதனிடையே குக்கி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது, அங்கு பெண்கள் மற்றும் குக்கி பழங்குடியினருக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மணிப்பூர் கொடூரம் குறித்து  பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகல் வலியுறுத்தி வருவதால்,  7 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Manipur Violence

இந்த நிலையில் மணிப்பூர் நிலைமையை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு 2 நாள் பயணமாக அம்மாநிலத்திற்கு சென்றுள்ளது.  ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகள் என்கிற அடிப்படையில் 21 பேர் அடங்கிய எம்.பிக்கள் குழு விமானம் மூலம் மணிப்பூர் சென்றுள்ளனர்.  இந்தக்குழு மணிப்பூர் பள்ளத்தாக்கு, மலைப்பகுதிகள் , நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு மணிப்பூர் ஆளுநரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்தக்குழுவில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி., விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.