அதானி குழும பங்கு விற்பனை ரத்து - முதலீட்டாளர்களை காப்பதற்காகவே இந்த முடிவு என அதானி விளக்கம்..

 
 அதானி குழும பங்குகள்..


இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டதாக  அதானி விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம், அண்மையில் அதானி குழுமம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது.  அதில், அதானி குழுமம் பல ஆண்டுகளாகப் போலி நிறுவனங்களின் பெயரில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும்,  அதானி குழுமத்திற்கு அதிக அளவில் கடன் இருப்பதாகவும்,  அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வைத்துள்ளதாகவும்  தெரிவித்திருந்தது.

அதானி என்டர்பிரைசஸ்

ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் வெளியான நாள் முதல் ,  அதானி குழுமத்தை சேர்ந்த அதானி ட்ரான்ஸ்மிஷன் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் , அதானி என்ர்ஜி, அதானி அம்புஜா, அதானி ஏசிசி சிமெண்ட் உள்ளிட்ட  9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20 சதவீதம் வரை  வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால்  அதானியின் சொத்து மதிப்பும் மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திலும், ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலும்  இருந்த  அதானி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.  பணக்காரர்கள் பட்டியலில்  10-வது இடத்திலிருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி  9-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.  இந்நிலையில்  அதானி குழும பங்குகளின் சரிவால் கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் மளமளவென சரிந்து வருகிறது.

அதானி என்டர்பிரைசஸ்

இதனால்  அதானி குழும பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வீடியோ வெளியிட்டு பேசிய அதானி, “என்னைப்பொறுத்தவரை எனது முதலீட்டாளர்களின் நலன்தான் முதன்மையானது; மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்;  பங்கு விற்பனை ரத்து முடிவால் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்ற, இரக்கத்தால் FPOவை தொடர்வது சரியானது அல்ல என முடிவெடுத்துள்ளோம். இந்திய பங்குச் சந்தைகள் நிலை பெற்றதும் மூலதன சந்தை ஒத்திகை மதிப்பாய்வு செய்து புதிய முடிவு எடுக்கப்படும்.” என்றும் கௌதம் அதானி  விளக்கமளித்துள்ளார்.