நெருக்கடி குறித்து அதானி குழுமத்திடம் விளக்கம் கேட்கப்படும் - எல்.ஐ.சி தலைவர் தகவல்..

 
நெருக்கடி குறித்து  அதானி குழுமத்திடம் விளக்கம் கேட்கப்படும் -  எல்.ஐ.சி தலைவர் தகவல்..


அதானி நிறுவனத்தின் பங்குகள் நாள்தோறும் தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில்,  அதன் நெருக்கடி குறித்து உரிய விளக்கம் கேட்கப்படும் என்று எல். ஐ. சி. தலைவர் எம். ஆர். குமார்  தெரிவித்துள்ளார்.  

கௌதம் அதானியின்,  அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் , அண்மையில் அறிக்கை வெளியிட்டது.   பல ஆண்டுகளாக பங்குச்சந்தையில் முறைகேடு,  போலி நிறுவனங்களை தொடங்கி மோசடி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், அதானி சம்ராஜ்ஜியமே ஆட்டம் கண்டது.  தொடர்ந்து 10 நாட்களாக  அதானி குழும பங்குகள் கடும் சரிவை கண்டு வருகின்றன.

adani

இதனால்  அதானி குழுமத்துடன் தொடர்புடைய வங்கிகளின் பங்குகளும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனையடுத்து  அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள மற்றும் கடன் வழங்கியுள்ள வங்கிகள் அந்த விவரங்களை தெரிவிக்குமாறு ரிசர்வ்  வங்கி  கேட்டுக்கொண்டிருந்தது.  அதில் அதானி குழுமத்தின் 5 நிறுவனங்களில் சுமார் 37,000 கோடி ரூபாயை , இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான  எல். ஐ. சி. முதலீடு செய்திருந்தது தெரியவந்தது. இதனால் எல்.ஐ.சியின் பங்குகளும் சரிவை சந்தித்து வருகின்றது.

நெருக்கடி குறித்து  அதானி குழுமத்திடம் விளக்கம் கேட்கப்படும் -  எல்.ஐ.சி தலைவர் தகவல்..

இதனையடுத்து எல்.ஐ. சி மற்றும் பெரும் தொகை கடன் வழங்கியுள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  இந்நிலையில் அதானி குழுமத்தின் நெருக்கடி குறித்து, அந்நிறுவனத்திடம்  விளக்கம் கேட்கப்படும் என எல். ஐ. சி. தலைவர் எம். ஆர். குமார் தெரிவித்திருக்கிறார். தங்கள் முதலீட்டாளர்கள் குழு ஏற்கனவே அதானியிடம் விளக்கம் கேட்டிருந்தாலும் உயர்மட்ட நிர்வாக குழுவினர்,  அதானி குழும நிர்வாகிகளை தொடர்புகொண்டு விளக்கம் கேட்ட உள்ளதாகவும், அந்த நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.