அகமதாபாத் விமான நிலையம் மூடல்
விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 குழந்தைகள் உட்பட 242 பேர் உடல் கருகி பலியாகின. விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. 3,000 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்துக்குள்ளான பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து இதுவரை சுமார் 50 சடலங்கள் மீட்கப்பட்டன. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 169 பேர் இந்தியர்களாவர்.
ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை அகமதாபாத் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, தரையிறக்கம் இல்லை. அகமதாபாத் வந்து கொண்டிருந்த விமானங்கள் அருகாமை விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற விமானம் அங்கே தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.


