டெல்லியை உலுக்கும் காற்று மாசு; இரண்டாம் நாளாக மக்கள் அவதி!

 
delhi.jpg1

தீபாவளி கொண்டாட்டத்தின் போது வெளியான நச்சுப் புகை காரணமாக தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளாக கடும் காற்று மாசு உருவாகியுள்ளது.

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் காற்று மாசு பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசின் அளவு அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் போது காற்று மாசு துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. 

ttn

எனினும் நகரின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிப்பதால் நேற்று காற்று மாசின் அளவு 655.06 என்னும் அளவை எட்டியது. டெல்லியில் இருக்கும் ஒவ்வொரு நபரும் 45 சிகரெட்டுகளை பிடித்தால் எந்த அளவுக்கு மாசுபாடு ஏற்படுமோ அந்த அளவுக்கு காற்று மாசு உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பதை தவிர்த்து, வட மாநிலங்களில் அறுவடைக்குப் பிறகு விவசாய கழிவுகளை எரிப்பதாலும் காற்று மாசு அதிகரிக்கிறது. 

இந்நிலையில், இன்று 2வது நாளாக டெல்லியை காற்று மாசுபாடு உலுக்குகிறது. இன்று காலை 6 மணி அளவில் காற்று மாசு அளவு 533 என்ற அளவில் இருந்தது. குறிப்பாக நொய்டா. குருகிராம். காசியாபாத் பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகமாக இருந்தது. நாளை மாலை வரை இந்த நிலைமை இருக்கும் என டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லி, உத்திர பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்ததால் இந்த அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.