கர்நாடக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு! - யாருக்கு எந்த துறை?

 
karnataka election congress

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்னர் அமைச்சர்களுக்கு இலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர். இதேபோல் 8 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். யூ.டி.காதர் சட்டப்பேரவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த 27ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 24 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஹெச்.கே.பாட்டீல், கிருஷ்ணபைரே கவுடா, செலுவராயசாமி, வெங்கடேஷ், மஹாதேவப்பா, ஈஸ்வர் கன்ரே, ராஜண்ணா, தினேஷ் குண்டுராவ், சரண பசப்பா தர்ஷனாப்பூர், சிவானந்த பாட்டீல், திம்மாபூர், எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனா, சிவராஜ் தங்கடகி, சரண பிரகாஷ் பாட்டீல், மங்கள் வைத்யா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.  

அமைச்சரவை விரிவாக்கத்திற்கு இரண்டு நாட்களுக்கு பிறகு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று அனைத்து அமைச்சர்களுக்கும் இலாகாக்களை ஒதுக்கினார். முதலமைச்சர் சித்தராமையா நிதி, ஐடி-பிடி, உளவுத்துறை, செய்தி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு நீர்வளம், பெங்களூரு நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பரமேஸ்வராவுக்கு போலீஸ் துறை கட்டுப்படுத்தும் உள்துறையும், எச்.கே. பாட்டிலுக்கு சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை, சுற்றுலாத்துறையும்,  கே.எச்.முனியப்பாவுக்கு உணவுத்துறையும், கே.ஜே.ஜார்ஜ்க்கு மின்சாரத்துறையும், ராமலிங்க ரெட்டிக்கு போக்குவரத்து துறையும், எம்பி பாட்டிலுக்கு பெரிய, நடுத்தர தொழில்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரத்துறையும், மஹா தேவப்பாவுக்கு சமூக நலத்துறையும், சதீஷ் ஜார்கிஹோலிக்கு பொதுப்பணித்துறையும், கிருஷ்ணா பைரெகவுடாவுக்கு வருவாய்துறையும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு நகர்புற வளர்ச்சித்துறையும், சிவானந்த் பாட்டிலுக்கு ஜவுளித்துறையும், ஜமீர் அகமது காந்துக்கு வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறையும், மது பங்காரப்பாவுக்கு தொடக்க மற்றும் மேல்நிலை கல்வித்துறையும், ஷரனா பசப்பாவுக்கு சிறு குறு தொழில்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈஸ்வர் கண்ட்ரேவுக்கு வனத்துறையும்,  செலுவராயசாமிக்கு வேளாண் துறையும், ரஹீம் காந்துக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஹஜ் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.