ராகுல் காந்தி விவகாரத்தை நாங்கள் கவனித்து வருகிறோம் - அமெரிக்கா கருத்து

 
US on Rahul

இந்திய நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தி மீதான வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறதது என ராகுல் காந்தி பேசியிருந்தார். மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது.  அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக  ராகுல்காந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து,  அதற்கு அனுமதி அளிக்கும் விதமாக  30 நாட்கள் அவகாசம் அளித்து  நீதிமன்றம் பினை வழங்கியிருந்தது. இதனிடையே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து அவர்கள்  தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்கிற நிலை உள்ளது. இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மக்களவை செயலகம் இந்த நடவடிக்கையை  எடுத்துள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளைமாளிகை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேலிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அவர், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மரியாதை அளிப்பது எந்த ஜனநாயகத்திற்கும் அடிப்படை. இந்திய நீதிமன்றத்தில் நடைபெறும் ராகுல்காந்தி மீதான வழங்கை நாங்கள் கவனித்து வருகிறோம். கருத்து சுதந்திரம் உள்பட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பது குறித்த உறுதிப்பாட்டை இந்திய அரசுடன் நாங்கள் பகிர்கிறோம். இவ்வாறு கூறினார்.