"இப்போது நடப்பது மோடி ஆட்சி, மன்மோகன் ஆட்சி அல்ல" - அமித்ஷா
காங்கிரஸின் தவறால்தான் பாகிஸ்தான் இருக்கிறது. பிரிவினையை அவர்கள் ஏற்றிருக்கவில்லை என்றால், இன்றைக்கு பாகிஸ்தானே இருந்திருக்காது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மக்களவையில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மோடி அரசு மன்மோகன் அரசைப் போல் வேடிக்கை பார்க்காது. காங்கிரஸ் பிரதமர்களைப் போல் மோடி அமைதியாக இருக்கமாட்டார். இப்போது நடப்பது மோடி ஆட்சி, மன்மோகன் ஆட்சி அல்ல. ஆப்ரேசன் சிந்தூர் பயங்கரவாதிகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. காங்கிரஸின் தவறால்தான் பாகிஸ்தான் இருக்கிறது. பிரிவினையை அவர்கள் ஏற்றிருக்கவில்லை என்றால், இன்றைக்கு பாகிஸ்தானே இருந்திருக்காது. பிரிவினைக்கு ஒப்புக்கொண்டதன் மூலம் காங்கிரஸ் நாட்டை பிரித்தது. காங்கிரஸ் ஆட்சியால் அழிக்க முடியாத பயங்கரவாதிகளை நாங்கள் அழித்துள்ளோம். பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஊக்கம் தருகிறது என்பதை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளோம். பாகிஸ்தான் கெஞ்சியதன் பெயரில் போரை நிறுத்த இந்தியாதான் முடிவு செய்தது.
ஆப்ரேசன் மகாதேவ் மூலம் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பகல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள். பகல்காம் பயங்கரவாதிகள் 3 பேரையும் சுட்டுக் கொன்று பழி தீர்த்துவிட்டோம். ஆப்ரேசன் சிந்தூரை தொடர்ந்து ஆப்ரேசன் மகாதேவும் முழு வெற்றி. நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் பாகிஸ்தானியர்கள்” என்றார்.


