ஆந்திரா வெள்ளம்- நடிகர் பவன் கல்யாண் ரூ.1 கோடி நிதியுதவி
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித்தீர்த்த கனமழையால் இரு மாநிலங்களிலும் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.
குறிப்பாக ஆந்திராவில் என்.டி.ஆர், கிருஷ்ணா, குண்டூர், எல்லூரு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் 15 பேர். தெலங்கானாவில் 16 பேர் என மழை வெள்ள பாதிப்பால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இரு மாநிலங்களிலும் 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 2. 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை அளிப்பதாக துணை
முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். இதேபோல் நடிகர் மகேஷ் பாபு ஆந்திரா, தெலங்கானா மாநிலத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.