ஒடிசா மாநிலம் பாலசோரில் மீண்டும் ரயில் விபத்து - தீப்பற்றி எரிந்த சரக்கு ரயில்

 
odisha

ஓடிசா மாநிலம் பாலசோரில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தின் துயரத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில்  மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்,  ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர்.  

இந்நிலையில், ஓடிசா மாநிலம் பாலசோரில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்திலுள்ள ருப்சா ரயில் நிலையத்தில் கடந்த மூன்று நாள்களாக சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. நிலக்கரி இருந்த அந்த ரயிலில் இன்று காலை திடீரென தீப்பற்றி புகை எழுந்தது. இது தொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.