மணிப்பூர் முதலமைச்சருடன் அசாம் முதலமைச்சர் திடீர் சந்திப்பு!

 
Manipur

மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்வதற்காக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பைரன் சிங்கை நேரில் சந்தித்து பேசினார். 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் பட்டியலின அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். இதனையடுத்து இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி மைதேயி சமுக மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி பேரணி நடைபெற்றது.  இந்நிலையில், மைதேயி சமூகத்தினரை பட்டியலின பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நடத்திய பேரணிக்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் வெடித்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவியது.  இந்தக் கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வர வழைக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள மாநில அரசு பரிந்துரை செய்துளது.  

இந்நிலையில், மணிப்பூரில் நிலைமையை பற்றி அறிவதற்காக, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று மணிப்பூருக்கு நேரில் சென்றார். அவர் மணிப்பூர் முதாமைச்சர் பைரன் சிங்கை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மணிப்பூரில் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். இரு சமூக மக்களுக்கு இடையே நடந்த மோதல் எதிரொலியாக இணையதள வசதி தடை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த தடை நீடித்து வருகிறது.