டெல்லி முதல்வராக நாளை பதவியேற்கிறார் அதிஷி..
டெல்லி முதலமைச்சராக அதிஷி சிங் நாளை( சனிக்கிழமை) பதவியேற்கிறார்.
டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் புதிய அமைச்சரவையில் , முன்னதாக அமைச்சர்களாக இருந்த சவுரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால்ராய், இம்ரான் உசைன் ஆகியோர் நீடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக புதிய அமைச்சர்கள் இருவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தம் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபையில், முதலமைச்சர் உள்பட 7 அமைச்சர்கள் முழுபலத்துடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) பதவியேற்பு விழா நடத்த ஆம் ஆத்மி பரிந்துரைத்த நிலையில், புதிய முதலமைச்சர் தொடர்பான கோப்புகளை ஆளுநர் வி.கே.சக்சேனா, நேற்று முன் தினம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அதன்படியே நாளை (செப் 20) பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. தொடர்ந்து செப்.26 மற்றும் 27ம் தேதிகளில் சட்டசபை சிறப்புக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார். தற்போது வரை டெல்லி சட்டசபையில் 61 இடங்களை ஆம் ஆத்மி வைத்துள்ளது.