என்னை கைது செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது பாஜக - அரவிந்த் கெஜ்ரிவால்..

 
arvind kejriwal

தன்னை கைது செய்யுமாறு பாஜக, சிபிஐக்கு  உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.  

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி , மதுபான கொள்கையை தளர்த்தி , பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு, சலுகைகளையும் அரசு வழங்கியதாகவும், இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.  இதற்கு பிரதிபலனாக ரூ.100 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்று, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு  கைமாறி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை  சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியே  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

cbi

இந்த ஊழல் வழக்கில் ஏற்கனவே டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக  நேரில் ஆஜரானார்.  அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோரும்  அவருக்கு ஆதரவாக சென்றுள்ளார். 

முன்னதாக  ஐந்து நிமிட வீடியோ ஒன்றை  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட  அர்விந்த் கெஜ்ரிவால், “சிபிஐ விசாரணையில் ஆஜராகி கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளிப்பேன். வருமான வரித்துறை ஆணையராக நான் இருந்துள்ளேன். நான் நினைத்திருந்தால் எவ்வளவோ பணம் சம்பாதித்திருக்க முடியும். நான் அவ்வாறு நினைக்கவில்லை. அர்விந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் யாரும் நேர்மையானவர் அல்ல.

என்னை கைது செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது பாஜக - அரவிந்த் கெஜ்ரிவால்..

அவர்கள்(பாஜக) அதிகாரம் மிக்கவர்கள். யாரை வேண்டுமானாலும் அவர்களால் சிறையில் அடைக்க முடியும். அந்த நபர் குற்றம் இழைத்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என தொடர்ந்து கூறி வருகிறார்கள். அர்விந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய வேண்டும் என்று பாஜக, சிபிஐக்கு அறிவுறுத்தி இருக்கிறது. பாஜக சொல்லிவிட்டால் சிபிஐ அதன்படிதான் நடக்கும். நான் எனது நாட்டை, பாரத மாதாவை நேசிக்கிறேன். நாட்டிற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.