யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் முதல்வர், சாலை ஆய்வாளர் அல்ல... கிரிராஜ் சிங்

 

கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அதிக் அகமது தான் சபர்மதி சிறையில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு கொண்டு செல்லும் போலீஸ் என்கவுன்டரில் கொன்று விடுவார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் முதல்வர், சாலை ஆய்வாளர் அல்ல என்று கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

2005ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியான அதிக் அகமது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பாலின் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான உமேஷ் பாலை தனது உதவியாளர்களுடன் சேர்ந்து அதிக் அகமது கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்ச் 28ம் தேதியன்று (செவ்வாய்) உமேஷ் பால் கொலை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதற்காக குஜராத் சபர்மதி சிறையில் உள்ள அதிக் அகமதுவை  போலீஸ் வேனில் சாலை வழியாக பிரயாக்ராஜூக்கு அழைத்து செல்ல நேற்று உத்தர பிரதேச போலீசார் தயாராக வந்தனர். 

அதிக் அகமது

இதற்கிடையே, பிரயாக்ராஜூக்கு கொண்டு செல்லும் வழியில் தன்னை போலீஸ் என்கவுன்டரில் கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தை அதிக் அகமது வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அதிக் அகமதுவின் பாதுகாப்பு குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கிரிராஜ் சிங் கூறியதாவது: யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் முதல்வர், சாலை ஆய்வாளர் அல்ல. 

கிரிராஜ் சிங்

போலீஸ் வாகனம் எந்த விபத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வது அதன் ஓட்டுநரின் கடமை. யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி மாதிரி உத்தர பிரதேசத்தில் உள்ள மாபியாக்கள் மற்றும் குண்டர்களின் இதயத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. யோகி ஆதித்யநாத் பழிவாங்கவில்லை. ஆனால் அவரது பாணி நிச்சயமாக உத்தரபிரதேசத்தில் மாபியாக்கள் மற்றும் குண்டர்களின் இதயத்தில் ஒரு வலுவான செய்தியையும் அச்சத்தையும் அனுப்பியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.