1962 போருக்கு முன்னும் பின்னும் சீனாவால் எவ்வளவு இந்திய நிலம் கைப்பற்றப்பட்டது?.. ராகுலுக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.
1962 போருக்கு முன்னும் பின்னும் இந்தியாவின் நிலப்பரப்பு எவ்வளவு சீனாவால் கைப்பற்றப்பட்டது என்பது நினைவிருக்கிறதா என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன் என்று பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி லடாக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், இங்கே கவலை என்னவென்றால்,நிச்சயமாக சீனா நிலத்தை அபகரித்து விட்டது. சீனாவின் ராணுவம் அப்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அவர்களின் (லடாக் மக்களின்) மேய்ச்சல் நிலம் கைப்பற்றப்பட்டதாகவும் மக்கள் கூறியுள்ளனர். ஆனால் பிரதமர் ஒரு அங்குல நிலமும் பறிக்கப்படவில்லை என்று என்று கூறினார். ஆனால் இது உண்மையல்ல, நீங்கள் யாரிடமாவது கேட்கலாம். லடாக் மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தில் (யூனியின் பிரதேசம்) மகிழ்ச்சியடையவில்லை என்று தெரிவித்தார்.
இந்திய நிலத்தை சீனா அபகரித்தது என்ற ராகுல் காந்தியின் கூற்றுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். எங்கு சென்றாலும் தேச விரோத கருத்துக்களை வெளியிடுவது அவரது இயல்பாகி விட்டது போலும். சீன படைகள் பின்வாங்குவதை நமது ராணுவம் துணிச்சலாக உறுதி செய்துள்ளது. ஆனால் ராகுல் காந்தியிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்?. தேசிய பாதுகாப்பு குறித்து ஒரு நாள் அவருடன் விவாதம் செய்வோம் என்று நான் அவரிடம் கேட்டுக் கொள்கிறேன். எனினும் நமது ராணுவத்தை பலவீனப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு குறித்து அவர் அறிக்கை விடக் கூடாது.
பாலகோட் மற்றும் உரி தாக்குதல்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். அவர்களிடமிருந்து (காங்கிரஸ்) நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?. இன்று லடாக் பற்றி ராகுல் காந்தி பேசும் போது, 1962 போருக்கு முன்னும் பின்னும் இந்தியாவின் நிலப்பரப்பு எவ்வளவு சீனாவால் கைப்பற்றப்பட்டது என்பது நினைவிருக்கிறதா என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி எல்லை பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை எற்படுத்தி சீனாவை எரிச்சலடையச் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதுதான் உங்கள் (காங்கிரஸ் கட்சி) கடந்த காலம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.